×

கட்டுமான பொருள் விலை கட்டுப்படுத்த வேண்டும்: ஆ.ஹென்றி வலியுறுத்தல்

சென்னை: அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனரும் தேசியத் தலைவருமான ஆ.ஹென்றி அறிக்கை: தமிழகத்தில் சமீபகாலமாக கட்டுமானப் பொருட்களான சிமெண்ட், இரும்பு கம்பி உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. இதனால் இத்துறை அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது. குறிப்பாக சிமெண்ட் விலை உயர்வு சம்பந்தமாக ஏற்கனவே அரசு தரப்பில் சிமெண்ட் உற்பத்தியாளர்களை அழைத்துப் பேசிய பிறகும் சிமெண்ட் விலை மூட்டை ஒன்றுக்கு ₹70 முதல் ₹100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

மேலும் உயர வாய்ப்புள்ளது. மேலும் சிமெண்ட், கம்பி, செங்கல், மணல், ஜல்லி, மரச்சாமான்கள், சானிட்டரிவேர், எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் உட்பட அனைத்து கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் கட்டுமானத் துறை நிலைகுலைந்திருக்கிறது. இந்த விலை உயர்வுக்கு காரணம், கட்டுமான பொருட்களின்மீது திரும்பப் பெற இயலாத வகையில், ஆடம்பர பொருளுக்கு இணையாக விதித்துள்ள சரக்கு மற்றும் சேவை வரியும், கட்டுமான பொருட்களை உற்பத்தி செய்வதற்கு தேவையான நிலக்கரி, எரிபொருள் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வும், தங்குதடையும், பற்றாக்குறையும்தான் என காரணம் கூறப்படுகிறது.

இதனால் தனியார் கட்டுமான நிறுவனங்களும், அரசின் திட்டத்தின்கீழ் வீடு கட்டும் சாதாரண, சாமானிய, பாமர மக்களும், வங்கிகளில் கடன் வாங்கி வீடு கட்டி வரும் நடுத்தர வர்க்கத்தினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வினால் பல இடங்களில் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கட்டுமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயநிலை உள்ளது. எனவே, இவ்விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, அதல பாதாளத்தில் இருக்கும் கட்டுமான தொழிலை மீட்பதற்கு, சிமெண்ட் உள்பட பல்வேறு கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

Tags : A. Henry , Need to control construction material prices: A. Henry insists
× RELATED மாநிலம் முழுவதும் பொறியாளர்களை ஒரே...